Monday, 6 August 2007

Posted on : Mon Aug 6 7:23:15 EEST 2007 உதயன்
ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்

பிராந்திய பொருளாதார, அரசியல் நலன்களுக்கு அது மிகவும் அவசியம் என்கிறார் சு.ப.தமிழ்ச்செல்வன் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை இந்தியா அங்கீகரிக்க வேண்டும். பிராந்திய பொருளாதார மற்றும் அரசியல் நலன்களின் அடிப்படையில் அது அவசியம்.இவ்வாறு வலியுறுத்தி உள்ளார் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன்.புதுடில்லியிலிருந்து வெளிவரும் "த சண்டே இந்தியன்'' வார இதழுக்கு வழங்கிய செவ்வியில் மேற்படி கருத்தை முன்வைத்துள்ளார்.

* ஜனாதிபதி மஹிந்தா யுத்தப் பிரகடனம் செய்திருக்கிறார். அதனால் அமைதிப் பேச்சுக்கள் குறித்துப் பிரஸ்தாபிப்பது பொருத்தமல்ல.

* வடக்கில் இராணுவத் தாக்குதல் விரிவடைந்தால் அந்த ஆக்கிரமிப்புப் போருக்கு நாம் பதிலடி கொடுப்போம்.

* விடுதலைப் புலிகளின் விமானப் படை, கடற்படை, தரைப்படை ஆகியவற்றினால் இந்தியாவுக்கோ வேறு எந்த அயல் நாட்டுக்கோ தீங்கேற்படுத்தப்போவதில்லை. எமது படைக் கட்டுமானங்களை நாம் கட்டியெழுப்புவது மக்களின் பாதுகாப்புக்கும் கௌரவமான வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்காகவுமே என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அச் செவ்வியின் முழு விபரம் வருமாறு:

கேள்வி: மஹிந்த ராஜபக்ஷவுடன் இனிப் பேச்சு நடத்தமாட்டோம் என்று ரொய்ட்டர்க்கு அளித்த பேட்டியில் அறிவித்திருந்தீர்கள். அதேபோல் இலங்கையின் முக்கிய பொருளாதார நிலைகளைத் தாக்க உள்ளதாகவும் கூறியிருந்தீர்கள். இதனைப் புலிகளின் யுத்தப் பிரகடனமாகக் கருதலாமா?
பதில்: மஹிந்த ராஜபக்ஷ அரசு பகிரங்கமாகவே தமிழர் தாயகத்தின் மீது ஒரு யுத்தப் பிரகடனத்தைச்செய்து நடத்திவருகின்றது. அவ்வாறான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருக்கின்ற நிலையில் நாம் அமைதிப் பேச்சுக்களைப் பற்றிக் கதைப்பதென்பது எந்த விதத்திலும் பொருத்தமாக இருக்கும் என்று நம்பவில்லை. அந்த வகையில் இனிமேல் அவர்களது இராணுவ முனைப்புக்களைச் செயலிழக்கச் செய்து அவற்றை முடக்குதற்குரிய எமது தாக்குதல் உத்திகளைத் தீவிரப்படுத்தி எமது தற்காப்பு உத்திகளை முழு அளவில் செயற்படுத்தவே எண்ணியிருக்கின்றோம்.

கே: சம்பூர், வாகரை தொடங்கி தற்போது குடுமிமலை (தொப்பிகல) என புலிகள் தரப்புக்கு அண்மைக்காலமாக பின்னடைவு ஏற்பட்டிருப்பது போலத் தோன்றுகின்றதே... கிழக்கு மாகாணத்திலிருந்து முற்றிலுமாக புலிகளை விரட்டிவிட்டோம் என்றும் அதை தேசிய தினமாகக் கொண்டாடுவதாகவும் இலங்கை அரசு கூறுகின்றதே?
ப: கிழக்கில் எமது தாக்குதல் உத்தியை நாம் மாற்றியிருக்கின்றோம். எமது தந்திரோபாயத்தை மாற்றியுள்ளோம். அங்குள்ள புவியியல் அமைவு, சூழ்நிலை கருதி அவை மாற்றப்பட்டிருக்கின்றனவே தவிர, எமது படைக் கட்டுமானம் எவையுமே அங்கிருந்து அகற்றப்படவில்லை. பின்வாங்கி வந்தோம் என்றும் இல்லை. இனிவரும் காலங்களில் அங்கு எமது தாக்குதல்கள் தீவிரமடையும். இலங்கை இராணுவம் பல தடவைகள் கிழக்கிலே பிரதேசங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதும், பின்னர் அவர்களை நாம் விரட்டியடிப்பதும் காலம் காலமாக மாறி மாறி இடம்பெற்றிக்கின்றது.இதனையே பெரும் கொண்டாட்டமாக கொண்டாடுவதென்பது சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை கிளப்பிவிடும் செயலாகும். தற்போது சிங்கள மக்கள் மத்தியில் இந்தப்போரினால் எழுந்துள்ள அன்றாட வாழ்வியல் நெருக்கடிகளை, பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்காகவுமே தவிர, அதனைப் பெரியதொரு வெற்றியாக யாரும் கருதவுமில்லை. அவர்களே அதனைப் பெரிதாக்கி கொண்டாடுகின்றார்கள். அத்தோடு தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்துச் சிங்கள மயப்படுத்த முனைவதும் மஹிந்த அரசின் நோக்கமாகும். இதை முறியடிப்பதற்கான தீவிர செயற்பாடுகளில் எமதும், எமது மக்களினுடைய செயற்பாடுகளும் தீவிரமடையும். சிங்களப் படைகளின் வெற்றிக்கொண்டாட்டங்கள் மிக விரைவில் சிங்களப் படைகளுக்கான பேரழிவாகவே முடியும்.

கே: இலங்கை இராணுவத்தின் தாக்குதலை உங்களது கட்டுப்பாட்டில் உள்ள வடக்குப் பகுதி தாக்குப்பிடிக்குமா?
ப: வடக்குப் பகுதி மட்டுமல்ல, தமிழர் தாயகம் எங்கிலும் இலங்கை இராணுவத்தின் தாக்குதல்கள் விரிவடையும் நிலையில் அவை கடந்த காலங்கள் போல முற்றாக செயலிழக்கச் செய்யப்பட்டு தோற்கடிக்கப்பட்டு விரட்டியடிக்கும் நடவடிக்கையில் நாம் வெற்றிபெறுவோம் என்ற முழு நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. தற்போது இலங்கைப் படைகளின் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு முகம்கொடுப்பதற்கு தமிழ் மக்களும், நாமும் முழு அளவில் தயாராகி வருகின்றோம். விரைவில் இதற்கான பதிலடியைக் கொடுப்போம்.

கே: இலங்கை இராணுவத்துக்கு உங்கள் முகாம்கள் மற்றும் திட்டங்கள் பற்றி கருணா குழுவினர் தகவல் கொடுக்கின்றனர் எனவும், கிழக்கில் இராணுவத்தின் வெற்றிக்கு அது உதவியாக இருந்தது எனவும் சொல்கிறார்களே...
ப: இலங்கை இராணுவம் கருணா குழு போன்ற தேசவிரோத சக்திகளிடமிருந்து இப்படியான தகவல்களை பெறுவதென்பது உண்மைதான். அவை இலங்கைப் படைகளின் தாக்குதல்களுக்கு உதவியிருக்கலாம் என்பதை நாம் மறுப்பதற்கில்லை.

கே: உங்களது விமானங்கள் சாதாரணமான விமானங்கள் என்றும், இதற்கெல்லாம் அஞ்சப்போவதில்லை என்றும் இலங்கை அரசு கூறுகின்றதே?
ப: எமது விமானம் சாதாரண விமானமாக இருந்தால் அதனை இலங்கை அரசுப் படைகள் சுட்டு வீழ்த்தியிருக்கலாம். அந்த அரசின் அதி உச்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்ட கோட்டைக்குள்ளேயே சென்று தாக்குதல்களை மேற்கொண்டு வெற்றிகரமாகத் திரும்பியிருக்கின்றோம். இப்படிக் குறிப்பிடுபவர்கள் அதனைத் தடுத்திருக்கலாமே! மூன்று தடவைகளுக்கு மேல் நாம் தாக்குதல் நடத்தியிருக்கின்றோம். இவர்களின் இயலாமையை வைத்துக்கொண்டே நீங்கள் உண்மையைப் புரிந்துகொள்ளலாம்.

கே: உங்களது விமானப் படையால் இந்தியாவுக்கு ஆபத்து என்று கூறப்டுகின்றதே?
ப: நிச்சயமாக ஒருபோதுமில்லை. எமது கடற்படையாலோ, விமானப் படையாலோ அல்லது தரைப்படையாலோ எந்தவிதமான எமது கட்டமைப்புக்களாலேயோ ஒருபோதும் எந்த அயல் நாட்டுக்கும் தீங்கேற்படுத்தப்போவதில்லை. எவருக்குமே நாம் அச்சுறுத்தலாக இருக்கப்போவதில்லை. எமது படைக் கட்டுமானங்களை நாம் கட்டியெழுப்பியது எமது மக்களின் தற்பாதுகாப்புக்காகவே. எமது மக்களின் பாதுகாப்பு, சுதந்திரமான கௌரவமான வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்கானதே. ஆகவே, எமது மக்கள் மீது ஆக்கிரமிப்பைத் தொடுக்கின்ற எதிரிக்கு எதிராக அவை பயன்படுத்தப்படுமே தவிர, எந்த எவருக்கும் அச்சுறுத்தல் விடுப்பதாக அவை அமையாது. அந்த வகையில் இது தவறாக முன்னெடுக்கப்படுகின்ற ஒரு பொய்ப்பிரசாரமே ஆகும்.

கே: உங்களின் தலைவர் பிரபாகரனின் மகன் இயக்கத்தில் என்ன பதவி நிலையில் உள்ளார்? விமான உருவாக்கத்தில் அவர் பங்கெடுத்தார் என்றெல்லாம் கூறப்படுகின்றதே? ஏன் அவரைப் பற்றிய தகவல்களை பகிரங்கப்படுத்தவில்லை? அனைவரும் அறிந்து கொள்வார்கள் அல்லவா?ப: எமது அமைப்பில் பதவி நிலைகளை நாம் முதன்மைப்படுத்துவதில்லை. கடமைகளும் அர்ப்பணிப்புக்களுமே எப்போதும் முதன்மைப்படுத்தப்படும். அந்த வகையில் எமது தேசியத் தலைவரது மகனும் எமது விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கியமான பணியை ஆற்றிக்கொண்டிருக்கின்றார். ஆகவே, அதில் பெரிதுபடுத்திக் கூறக்கூடியவாறு ஒன்றுமில்லை என்றே நினைக்கின்றேன்.

கே: ஈழத் தமிழர் பிரச்சினையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளிப்படையாகவே உங்களை எதிர்த்துவருகின்றார். ஆகையால் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தற்போதைய முதல்வர் கருணாநிதி ஆகியோர் குறித்த உங்களது கருத்து?
ப: தமிழகத்தில் சில தமிழகக் கட்சித் தலைவர்கள் சில தவறான சக்திகளினுடைய தவறான தகவல்கள், பிரசாரத்தின் அடிப்படையில் தவறான புரிதல்களைப் பெற்றிருக்கின்றார்கள். நிச்சயமாக அவர்களும் விரைவில் மனம்மாறி ஈழத் தமிழ் மக்களினுடைய சுதந்திரமும்விடுதலையும் அவர்களின் உரிமை என்ற வகையில் சகலரும் இந்தப் போராட்டத்தினுடைய தார்மீக அடிப்படையைப் புரிந்துகொண்டு ஒன்றிணைந்து உதவுவார்கள் என்று தான் நாங்கள் நம்புகின்றோம். தமிழ் மக்களினுடைய இருப்பையும், உயிர் வாழ்தலிற்கான அவர்களுடைய வாழ்வுரிமையினையும் எந்தவொரு தமிழர் என்ற உணர்வு கொண்டவர்களும் மறுதலிக்க மாட்டார்கள் என்றே நம்புகின்றோம்.

கே: இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவி செய்யாவிட்டால் இலங்கையில் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் தலையீட்டுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகின்றதே. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
ப: சிங்கள தேசத்திற்கும், சிங்கள வெறிபிடித்த அரசுகளுக்கும் இன்று பல நாடுகள் இராணுவ பொருளாதார உதவிகளைச் செய்து வருகின்றன. இரண்டு நோக்கங்களுக்காக செய்து வருகின்றன. ஒன்று மத பண்பாட்டு தொடர்பு உறவு என்ற வகையிலும் மற்றையது பிராந்திய பொருளாதார அரசியல் நலன்களின் அடிப்படையிலும் உதவி வருகின்றார்கள்.இந்தியாவைப் பொறுத்தவரையிலும் அதனைச் சிங்களத் தலைமைகளும் சிங்கள மக்களும் தமது எதிரிகளாகவே கருதுகின்றார்கள். ஏனெனில், தமிழ் நாடு என்கின்ற தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நிலப்பரப்பிற்கு அண்மையாக அதனுடன் சகலவற்றிலும் தொடர்பு கொண்டவர்களாக எமது மக்கள் இருப்பதாலாகும்.ஆயினும், இத்தகைய பிராந்திய ரீதியிலான உதவிகள் எம்மை வந்தடையக் கூடாது என்பதற்காகவே இன்றைய சிங்களத் தலைமைகள் தமக்கும் இந்திய அரசுக்குமிடையில் நல்லுறவு இருப்பது போல எப்போதும் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றன.இலங்கைத் தீவில் தமிழினத்தையே முற்றாக இன அழிப்புச் செய்து அவர்களுக்கான தாயகக் கோட்பாட்டைச் சிதைத்து இல்லாமற் செய்வதே அரசின் உண்மையான நோக்கமாகும். அதற்காக அவர்கள் எத்தகைய பிராந்திய விரோத சக்திகளிடமும் கையேந்துவதற்கு தயங்கியதில்லை. அதனொரு வெளிப்பாடே தற்போதைய நிலைமை. இதனை இல்லாமற் செய்வதாகக் கருதிக்கொண்டு பிராந்திய அரசுகள் இலங்கை அரசின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு கை கொடுப்பதென்பது மேலும் இப் பிராந்தியாத்தின் சகஜ நிலையை கேள்விக்குள்ளாக்குமே தவிர தீர்வாக அமையாதுஎன்றார்.

No comments: